அலறாமல் பெருமூச்சு விடு, இழவு கொண்டாடவேண்டாம்; உன் பாகையை உன் தலையிலே கட்டி, உன் பாதரட்சைகளை உன் பாதங்களில் தொடுத்துக்கொள்; உன் தாடியை மூடாமலும் துக்கங்கொண்டாடுகிறவர்களின் அப்பத்தைப் புசியாமலும் இருக்கக்கடவாய் என்றார்.
விடியற்காலத்தில் நான் ஜனங்களோடே பேசினேன்; அன்று சாயங்காலத்தில் என் மனைவி செத்துப்போனாள்; எனக்குக் கட்டளையிட்டபடியே விடியற்காலத்தில் செய்தேன்.
அப்பொழுது ஜனங்கள் என்னை நோக்கி: நீர் செய்கிறவைகள் எங்களுக்கு என்னத்திற்கு அடையாளம் என்பதை எங்களுக்குத் தெரிவிக்கமாட்டீரா என்று கேட்டார்கள்.
நான் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
நீ இஸ்ரவேல் வீட்டாரை நோக்கி, கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: இதோ, உங்கள் பலத்தின் முக்கியமும் உங்கள் கண்களின் விருப்பமும் உங்கள் ஆத்துமாவின் வாஞ்சையுமாகிய என் பரிசுத்த ஸ்தலத்தை நான் பரிசுத்தக்குலைச்சலாக்குகிறேன்; நீங்கள் விட்டுவந்த உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் பட்டயத்தால் விழுவார்கள்.
அப்பொழுது நான் செய்ததுபோல நீங்களும் செய்வீர்கள்; தாடியை மூடாமலும் துக்கங்கொண்டாடுகிறவர்களின் அப்பத்தைப் புசியாமலும் இருப்பீர்கள்.
உங்கள் பாகைகள் உங்கள் தலைகளிலும், உங்கள் பாதரட்சைகள் உங்கள் கால்களிலும் இருக்கும்; நீங்கள் புலம்பாமலும் அழாமலும் இருந்து, உங்கள் அக்கிரமங்களில் வாடிப்போய், ஒருவரையொருவர் பார்த்துத் தவிப்பீர்கள்.
அப்படியே எசேக்கியேல் உங்களுக்கு அடையாளமாக இருப்பான்; அவன் செய்தபடி எல்லாம் நீங்களும் செய்வீர்கள்; இப்படி வரும்போது நான் கர்த்தராகிய ஆண்டவர் என்று அறிந்துகொள்வீர்கள் என்று சொல் என்று உரைத்தார் என்றேன்.
பின்னும் மனுபுத்திரனே, நான் எந்த நாளிலே அவர்களுடைய பலத்தையும், அவர்களுடைய அலங்காரத்தின் மகிழ்ச்சியையும், அவர்களுடைய கண்களின் விருப்பத்தையும், அவர்களுடைய ஆத்துமாவின் விசேஷித்த வாஞ்சையையும், அவர்களுடைய குமாரரையும், அவர்களுடைய குமாரத்திகளையும் அவர்களைவிட்டு எடுத்துக்கொள்ளுகிறேனோ,
அந்த நாளிலேதானே தப்பிவந்த ஒருவன் உன்னிடத்தில் வந்து உன் காதுகள் கேட்கச் சொல்லுவான் அல்லவோ?
அந்த நாளிலேதானே உன் வாய்திறக்கப்பட்டு, நீ தப்பிவந்தவனோடே பேசுவாய்; இனி மவுனமாயிருக்கமாட்டாய்; இப்படி நீ அவர்களுக்கு அடையாளமாக இருப்பாய்; நான் கர்த்தர் என்று அப்பொழுது அறிந்துகொள்வார்கள் என்றார்.
கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
மனுபுத்திரனே, நீ அம்மோன் புத்திரருக்கு எதிராக உன் முகத்தைத் திருப்பி, அவர்களுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்து,
அம்மோன் புத்திரருக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவருடைய வார்த்தையைக் கேளுங்கள்; கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்: என் பரிசுத்த ஸ்தலம் பரிசுத்தக்குலைச்சலாக்கப்படுகிறபோதும், இஸ்ரவேல்தேசம் பாழாக்கப்படுகிறபோதும், யூதா வம்சத்தார் சிறையிருப்பிலே போகிறபோதும், நீ அவர்களுக்கு விரோதமாக ஆ ஆ, என்று நிந்தித்தபடியினால்,
இதோ, நான் உன்னைக் கிழக்குத் தேசத்தாருக்குச் சுதந்தரமாக ஒப்புக்கொடுப்பேன், அவர்கள் உன்னில் தங்கள் அரண்களைக் கட்டி, உன்னில் தங்கள் வாசஸ்தலங்களை உண்டுபண்ணுவார்கள்; அவர்கள் உன் கனிகளைப் புசித்து, உன் பாலைக் குடிப்பார்கள்.
நான் ரப்பாவை ஒட்டகங்களின் கொட்டகையும், அம்மோன் புத்திரரின் தேசத்தை ஆட்டுக்கிடையுமாக்குவேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேல் தேசத்துக்கு விரோதமாக நீ கைகொட்டி, உன் காலால் தட்டி, வர்மம் வைத்து, ஆகடியம் பண்ணினபடியினால்,
இதோ, உனக்கு விரோதமாக நான் என் கையை நீட்டி, உன்னை ஜாதிகளுக்குக் கொள்ளையாக ஒப்புக்கொடுத்து, உன்னை ஜனங்களுக்குள்ளே வேரற்றுப்போகப்பண்ணி, உன்னை தேசங்களுக்குள்ளே அழித்து, உன்னை நிர்மூலமாக்குவேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வாய்.
கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: இதோ, யூதா வம்சத்தார் எல்லா ஜாதிகளுக்கும் ஒத்தவர்களென்று மோவாபும் சேயீரும் சொல்லுகிறபடியினால்,
இதோ, அம்மோன் புத்திரரின்பேர் ஜாதிகளுக்குள் இராதபடிக்கு நான் அம்மோன் புத்திரரின் தேசத்தைக் கிழக்குத் தேசத்தாருக்குத் திறந்துவைத்து, சுதந்தரமாய் ஒப்புக்கொடுக்கிறவண்ணமாக,
நான் மோவாப் தேசத்தின் பக்கத்திலுள்ள அதின் கடையாந்தர ஊர்களாகிய பட்டணங்கள் முதற்கொண்டுள்ள தேசத்தின் அலங்காரமாகிய பெத்யெசிமோத்தையும், பாகால்மெயோனையும், கீரீயாத்தாயீமையும் அவர்களுக்குத் திறந்துவைத்து,
மோவாபிலே நியாயங்களைச் செய்வேன், அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.
கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: ஏதோம் யூதா வம்சத்தாரிடத்தில் குரோதந்தீர்த்து, பழிவாங்கி, பெரிய குற்றஞ்செய்தபடியினால்,
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்: நான் ஏதோம் தேசத்துக்கு விரோதமாக என் கையை நீட்டி அதில் மனுஷரையும் மிருகங்களையும் இராதபடிக்குச் சங்காரம்பண்ணி, அதைத் தேமான் துவக்கித் தேதான்மட்டும் வனாந்தரமாக்குவேன்; பட்டயத்தால் விழுவார்கள்.
நான் இஸ்ரவேலாகிய என் ஜனத்தின் கையினால் ஏதோமினிடத்தில் பழிவாங்குவேன்; அவர்கள் என் கோபத்தின்படியும் என் உக்கிரத்தின்படியும் ஏதோமுக்குச் செய்வார்கள்; அப்பொழுது நான் பழிவாங்குவது இன்னதென்று அறிந்துகொள்வார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.