வெட்டுண்டவர்களின் நடுவே அவனை அவனுடைய எல்லா ஏராளமான ஜனத்துக்குள்ளும் கிடத்தினார்கள்; அவனைச் சுற்றிலும் அவர்களுடைய பிரேதக்குழிகள் இருக்கிறது; அவர்களெல்லாரும் பட்டயத்தால் வெட்டுண்ட விருத்தசேதனமில்லாதவர்கள்; ஜீவனுள்ளோருடைய தேசத்திலே அவர்கள் கெடியுண்டாக்கினவர்களாயிருந்தும், அவர்கள் குழியில் இறங்கினவர்களோடேகூடத் தங்கள் அவமானத்தைச் சுமக்கிறார்கள்; அவன் வெட்டுண்டவர்களின் நடுவே வைக்கப்பட்டிருக்கிறான்.
அங்கே மேசேக்கும் தூபாலும் அவர்களுடைய ஏராளமான ஜனங்களும் கிடக்கிறார்கள்; அவர்களைச்சுற்றிலும் அவர்களுடைய பிரேதக்குழிகள் இருக்கிறது; அவனுடைய ஜீவனுள்ளோருடைய தேசத்திலே கெடியுண்டாக்கினவர்களாயிருந்தும், அவர்களெல்லாரும் விருத்தசேதனமில்லாதவர்கள்; பட்டயத்தால் வெட்டுண்டு விழுவார்கள்.
ஜீவனுள்ளோருடைய தேசத்திலே பராக்கிரமசாலிகளுக்குக் கெடியுண்டாக்குகிறவர்களாயிருந்தும், அவர்கள் விருத்தசேதனமில்லாதவர்களாய் விழுந்து, தங்கள் யுத்த ஆயுதங்களோடு பாதாளத்திலிறங்கின பராக்கிரமசாலிகளோடே இவர்கள் கிடப்பதில்லை; அவர்கள் தங்கள் பட்டயங்களைத் தங்கள் தலைகளின்கீழ் வைத்தார்கள்; ஆனாலும் அவர்களுடைய அக்கிரமம் தங்கள் எலும்புகளின்மேல் இருக்கும்.
நீயும் விருத்தசேதனமில்லாதவர்களின் நடுவே நொறுங்குண்டு, பட்டயத்தால் வெட்டுண்டவர்களோடே கிடப்பாய்.
அங்கே ஏதோமும் அதின் ராஜாக்களும் அதின் எல்லாப் பிரபுக்களும் கிடக்கிறார்கள்; பட்டயத்தால் வெட்டுண்டவர்களிடத்தில் இவர்கள் தங்கள் வல்லமையோடுங்கூடக் கிடத்தப்பட்டார்கள்; இவர்கள் விருத்தசேதனமில்லாதவர்களிடத்திலும், குழியில் இறங்குகிறவர்களிடத்திலும் கிடக்கிறார்கள்.
அங்கே வடதிசை அதிபதிகள் அனைவரும் எல்லாச் சீதோனியரும் கிடக்கிறார்கள்; இவர்கள் கெடியுண்டாக்குகிறவர்களாயிருந்தாலும் தங்கள் பராக்கிரமத்தைக் குறித்து வெட்கப்பட்டு, வெட்டுண்டவர்களிடத்தில் இறங்கி, பட்டயத்தால் வெட்டுண்டவர்களோடே விருத்தசேதனமில்லாதவர்களாய்க் கிடந்து, குழியில் இறங்கினவர்களிடத்தில் தங்கள் அவமானத்தைச் சுமந்துகொண்டிருக்கிறார்கள்.
பார்வோன் அவர்களைப் பார்த்து தன் ஏராளமான ஜனத்தின்பேரிலும் ஆறுதலடைவான்; பட்டயத்தால் வெட்டுண்டார்களென்று, பார்வோனும் அவனுடைய சர்வசேனையும் ஆறுதலடைவார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
என்னைப் பற்றிய கெடியை ஜீவனுள்ளோர் தேசத்தில் உண்டுபண்ணுகிறேன், பார்வோனும் அவனுடைய ஏராளமான ஜனமும் பட்டயத்தால் வெட்டுண்டவர்களிடத்தில் விருத்தசேதனமில்லாதவர்களின் நடுவே கிடத்தப்படுவார்கள் என்கிறதைக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.
கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
மனுபுத்திரனே, நீ உன் ஜனத்தின் புத்திரரோடே பேசி, அவர்களோடே சொல்லவேண்டியதாவது: நான் தேசத்தின்மேல் பட்டயத்தை வரப்பண்ணுகையில் தேசத்தின் ஜனம் தங்கள் எல்லைகளிலுள்ள ஒருவனை அழைத்து, அவனைத் தங்களுக்குக் காவற்காரனாக வைத்தபின்பு,
இவன் தேசத்தின்மேல் பட்டயம் வருவதைக்கண்டு, எக்காளம் ஊதி, ஜனத்தை எச்சரிக்கும்போது,
எக்காளத்தின் சத்தத்தைக் கேட்கிறவன் அதைக் கேட்டும், எச்சரிக்கையாயிராமல், பட்டயம் வந்து அவனை வாரிக்கொள்ளுகிறது உண்டானால், அவனுடைய இரத்தப்பழி அவன் தலையின்மேல் சுமரும்.
அவன் எக்காளத்தின் சத்தத்தைக்கேட்டும், எச்சரிக்கையாயிருக்கவில்லை; அவனுடைய இரத்தப்பழி அவன்பேரிலே சுமரும்; எச்சரிக்கையாயிருக்கிறவனோ தன் ஜீவனைத் தப்புவித்துக்கொள்ளுவான்.
காவற்காரன் பட்டயம் வருவதைக் கண்டும், அவன் எக்காளம் ஊதாமலும் ஜனங்கள் எச்சரிக்கப்படாமலும், பட்டயம் வந்து அவர்களில் யாதொருவனை வாரிக்கொள்ளுகிறது உண்டானால், அவன் தன் அக்கிரமத்திலே வாரிக்கொள்ளப்பட்டான்; ஆனாலும் அவன் இரத்தப்பழியைக் காவற்காரன் கையிலே கேட்பேன்.
மனுபுத்திரனே, நான் உன்னை இஸ்ரவேல் வம்சத்தாருக்குக் காவற்காரனாக வைத்தேன்; ஆகையால் நீ என் வாயினாலே வார்த்தையைக்கேட்டு, என் நாமத்தினாலே அவர்களை எச்சரிப்பாயாக.
நான் துன்மார்க்கனை நோக்கி: துன்மார்க்கனே, நீ சாகவே சாவாயென்று சொல்லுகையில், நீ துன்மார்க்கனைத் தன் துன்மார்க்கத்தில் இராதபடி எச்சரிக்கத்தக்கதாக அதை அவனுக்குச் சொல்லாமற்போனால், அந்தத் துன்மார்க்கன் தன் அக்கிரமத்திலே சாவான்; ஆனாலும் அவன் இரத்தப்பழியை உன் கையிலே கேட்பேன்.
துன்மார்க்கன் தன் வழியைவிட்டுத் திரும்பும்படி நீ அவனை எச்சரித்தும், அவன் தன் வழியைவிட்டுத் திரும்பாமற்போனால், அவன் தன் அக்கிரமத்திலே சாவான்; நீயோ உன் ஆத்துமாவைத் தப்புவிப்பாய்.
மனுபுத்திரனே, நீ இஸ்ரவேல் வம்சத்தாரை நோக்கி: எங்கள் துரோகங்களும் எங்கள் பாவங்களும் எங்கள்மேல் இருக்கிறது, நாங்கள் சோர்ந்துபோகிறோம், நாங்கள் பிழைப்பது எப்படியென்று நீங்கள் சொல்லுகிறீர்கள்.
கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: நான் துன்மார்க்கனுடைய மரணத்தை விரும்பாமல், துன்மார்க்கன் தன் வழியைவிட்டுத் திரும்பிப் பிழைப்பதையே விரும்புகிறேன் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; இஸ்ரவேல் வம்சத்தாரே, உங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்புங்கள், திரும்புங்கள்; நீங்கள் ஏன் சாகவேண்டும் என்கிறார் என்று அவர்களோடே சொல்லு.
மனுபுத்திரனே, நீ உன் ஜனத்தின் புத்திரரை நோக்கி: நீதிமான் துரோகம்பண்ணுகிற நாளிலே அவனுடைய நீதி அவனைத் தப்புவிப்பதில்லை; துன்மார்க்கன் தன் துன்மார்க்கத்தைவிட்டுத் திரும்புகிற நாளிலே அவன் தன் அக்கிரமத்தினால் விழுந்துபோவதுமில்லை; நீதிமான் பாவஞ்செய்கிற நாளிலே தன் நீதியினால் பிழைப்பதுமில்லை.
பிழைக்கவே பிழைப்பாய் என்று நான் நீதிமானுக்குச் சொல்லும்போது, அவன் தன் நீதியை நம்பி, அநியாயஞ்செய்தால், அவனுடைய நீதியில் ஒன்றும் நினைக்கப்படுவதில்லை, அவன் செய்த தன் அநியாயத்திலே சாவான்.
பின்னும் சாகவே சாவாய் என்று நான் துன்மார்க்கனுக்குச் சொல்லும்போது, அவன் தன் பாவத்தைவிட்டுத் திரும்பி, நியாயமும் நீதியுஞ்செய்து,
துன்மார்க்கன் தான் வாங்கின அடைமானத்தையும் தான் கொள்ளையிட்ட பொருளையும் திரும்பக்கொடுத்துவிட்டு, அநியாயம் செய்யாதபடி ஜீவப்பிரமாணங்களில் நடந்தால், அவன் சாகாமல் பிழைக்கவே பிழைப்பான்.
அவன் செய்த அவனுடைய எல்லாப் பாவங்களும் அவனுக்கு விரோதமாக நினைக்கப்படுவதில்லை; அவன் நியாயமும் நீதியும் செய்தான், பிழைக்கவே பிழைப்பான் என்று சொல்லு.
உன் ஜனத்தின் புத்திரரோ, ஆண்டவருடைய வழி செம்மையானதல்ல என்கிறார்கள்; அவர்களுடைய வழியே செம்மையானதல்ல.