மேஜையின்மேல் நித்தமும் என் சந்நிதியில் சமுகத்தப்பங்களை வைக்கக்கடவாய்.
பசும்பொன்னினால் ஒரு குத்துவிளக்கையும் உண்டாக்குவாயாக; அது பொன்னினால் அடிப்புவேலையாய்ச் செய்யப்படவேண்டும்; அதின் தண்டும் கிளைகளும் மொக்குகளும் பழங்களும் பூக்களும் பொன்னினால் செய்யப்படவேண்டும்.
ஆறு கிளைகள் அதின் பக்கங்களில் விடவேண்டும்; குத்துவிளக்கின் மூன்று கிளைகள் அதின் ஒரு பக்கத்திலும், குத்துவிளக்கின் மூன்று கிளைகள் அதின் மறுபக்கத்திலும் விடவேண்டும்.
ஒவ்வொரு கிளையிலே வாதுமைக்கொட்டைக்கு ஒப்பான மூன்று மொக்குகளும், ஒரு பழமும், ஒரு பூவும் இருப்பதாக; குத்துவிளக்கிலிருந்து புறப்படும் ஆறு கிளைகளிலும் அப்படியே இருக்கவேண்டும்.
விளக்குத்தண்டிலோ, வாதுமைக்கொட்டைக்கு ஒப்பான நாலு மொக்குகளும், பழங்களும், பூக்களும் இருப்பதாக.
அதிலிருந்து புறப்படும் இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும், வேறு இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும், மற்ற இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும் இருப்பதாக; விளக்குத்தண்டிலிருந்து புறப்படும் ஆறு கிளைகளுக்கும் அப்படியே இருக்கவேண்டும்.
அவைகளின் பழங்களும் அவைகளின் கிளைகளும் பொன்னினால் உண்டானவைகளாயிருப்பதாக; அவையெல்லாம் தகடாய் அடித்த பசும்பொன்னால் செய்யப்பட்ட ஒரே வேலையாயிருக்கவேண்டும்.
அதில் ஏழு அகல்களைச் செய்வாயாக; அதற்கு நேரெதிராய் எரியும்படிக்கு அவைகள் ஏற்றப்படக்கடவது.
அதின் கத்தரிகளும் சாம்பல் பாத்திரங்களும் பசும்பொன்னினால் செய்யப்படுவதாக.
அதையும் அதற்குரிய பணிமுட்டுகள் யாவையும் ஒரு தாலந்து பசும்பொன்னினால் பண்ணவேண்டும்.
மலையிலே உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படியே அவைகளைச் செய்ய எச்சரிக்கையாயிரு.
மேலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலினாலும் இளநீலநூலினாலும் இரத்தாம்பரநூலினாலும் சிவப்புநூலினாலும் நெய்யப்பட்ட பத்து மூடுதிரைகளால் வாசஸ்தலத்தை உண்டுபண்ணுவாயாக; அவைகளில் விசித்திரவேலையாய்க் கேருபீன்களைச் செய்யக்கடவாய்.
ஒவ்வொரு மூடுதிரையும் இருபத்தெட்டு முழ நீளமும் நாலு முழ அகலமுமாயிருப்பதாக; மூடுதிரைகளெல்லாம் ஒரே அளவாயிருக்கவேண்டும்.
ஐந்து மூடுதிரை ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கவேண்டும்; மற்ற ஐந்து மூடுதிரைகளும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கவேண்டும்.
இணைக்கப்பட்ட ஒரு மூடுதிரையின் கடைஓரத்தில் இளநீலநூலால் காதுகளை உண்டுபண்ணு; இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் கடைஓரத்திலும் அப்படியே செய்வாயாக.
காதுகள் ஒன்றோடொன்று இணையும்படி ஒரு மூடுதிரையில் ஐம்பது காதுகளையும், இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் ஓரத்தில் ஐம்பது காதுகளையும் உண்டுபண்ணுவாயாக.
ஐம்பது பொன் கொக்கிகளையும் பண்ணி, மூடுதிரைகளை ஒன்றோடொன்று அந்தக் கொக்கிகளால் இணைத்துவிடுவாயாக; அப்பொழுது அது ஒரே வாசஸ்தலமாகும்.
வாசஸ்தலத்தின்மேல் கூடாரமாகப் போடும்படி ஆட்டுமயிரால் பதினொரு மூடுதிரைகளை உண்டுபண்ணுவாயாக.
ஒவ்வொரு மூடுதிரை முப்பது முழ நீளமும் நாலு முழ அகலமுமாய் இருக்கவேண்டும்; பதினொரு மூடுதிரைகளும் ஒரே அளவாயிருக்கவேண்டும்.
ஐந்து மூடுதிரைகளை ஒன்றாகவும், ஆறு மூடுதிரைகளை ஒன்றாகவும் இணைக்கவேண்டும்; ஆறாம் மூடுதிரையைக் கூடாரத்தின் முகப்பிற்கு முன்னே மடித்துப் போடுவாயாக.
இணைக்கப்பட்ட ஒரு மூடுதிரையின் கடை ஓரத்தில் ஐம்பது காதுகளையும், இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் ஓரத்தில் ஐம்பது காதுகளையும் உண்டுபண்ணி,
ஐம்பது வெண்கலக் கொக்கிகளைச் செய்து, கொக்கிகளைக் காதுகளில் மாட்டி, ஒரே கூடாரமாகும்படி அதை இணைத்துவிடுவாயாக.
கூடாரத்தின் மூடுதிரைகளில் மிச்சமான பாதி மூடுதிரை வாசஸ்தலத்தின் பின்புறத்தில் தொங்கவேண்டும்.
கூடாரத்தினுடைய மூடுதிரைகளின் நீளத்திலே மீதியானதில், இந்தப்புறத்தில் ஒரு முழமும் அந்தப்புறத்தில் ஒரு முழமும் வாசஸ்தலத்தை மூடும்படி அதின் பக்கங்களிலே தொங்கவேண்டும்.
சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத்தோலினால் கூடாரத்திற்கு ஒரு மூடியையும், அதின்மேல் தகசுத்தோலால் ஒரு மூடியையும் உண்டுபண்ணுவாயாக.