Total Matches: 31082

மத்தேயு 5:14

நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது.

மத்தேயு 5:15

விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல், விளக்குத் தண்டின்மேல் வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும்.

மத்தேயு 5:16

இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.

மத்தேயு 5:17

நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்.

மத்தேயு 5:18

வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்துபோகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

மத்தேயு 5:19

ஆகையால், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றிலும் சிறிதானதொன்றையாகிலும் மீறி, அவ்விதமாய் மனுஷருக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எல்லாரிலும் சிறியவன் என்னப்படுவான்; இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவனோ, பரலோகராஜ்யத்தில் பெரியவன் என்னப்படுவான்.

மத்தேயு 5:20

வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

மத்தேயு 5:21

கொலை செய்யாதிருப்பாயாக என்பதும், கொலைசெய்கிறவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான் என்பதும், பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.

மத்தேயு 5:22

நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்பவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனைச் சங்கத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்திற்கு ஏதுவாயிருப்பான்.

மத்தேயு 5:23

ஆகையால், நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டென்று அங்கே நினைவு கூருவாயாகில்,

மத்தேயு 5:24

அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து.

மத்தேயு 5:25

எதிராளி உன்னை நியாயாதிபதியினிடத்தில் ஒப்புக்கொடாமலும், நியாயாதிபதி உன்னைச் சேவகனிடத்தில் ஒப்புக்கொடாமலும், நீ சிறைச்சாலையில் வைக்கப்படாமலும் இருக்கும்படியாக, நீ உன் எதிராளியோடு வழியில் இருக்கும்போதே சீக்கிரமாய் அவனுடனே நல்மனம் பொருந்து.

மத்தேயு 5:26

பொருந்தாவிட்டால், நீ ஒரு காசும் குறைவின்றிக் கொடுத்துத் தீர்க்குமட்டும் அவ்விடத்திலிருந்து புறப்படமாட்டாய் என்று, மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்.

மத்தேயு 5:27

விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.

மத்தேயு 5:28

நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று.

மத்தேயு 5:29

உன் வலது கண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்து போடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்.

மத்தேயு 5:30

உன் வலது கை உனக்கு இடறலுண்டாக்கினால், அதைத் தறித்து எறிந்து போடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்.

மத்தேயு 5:31

தன் மனைவியைத் தள்ளிவிடுகிற எவனும், தள்ளுதற்சீட்டை அவளுக்கு கொடுக்கக்கடவன் என்று உரைக்கப்பட்டது.

மத்தேயு 5:32

நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; வேசித்தன முகாந்தரத்தினாலொழிய தன் மனைவியைத் தள்ளிவிடுகிறவன், அவளை விபசாரஞ்செய்யப்பண்ணுகிறவனாயிருப்பான்; அப்படித் தள்ளிவிடப்பட்டவளை விவாகம்பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான்.

மத்தேயு 5:33

அன்றியும், பொய்யாணையிடாமல் உன் ஆணைகளைக் கர்த்தர் முன்னிலையாய்ச் செலுத்துவாயாக என்று பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.

மத்தேயு 5:34

நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் பரிச்சேதம் சத்தியம்பண்ணவேண்டாம்; வானத்தின் பேரில் சத்தியம்பண்ணவேண்டாம், அது தேவனுடைய சிங்காசனம்.

மத்தேயு 5:35

பூமியின் பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், அது அவருடைய பாதபடி; எருசலேமின் பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், அது மகாராஜாவினுடைய நகரம்.

மத்தேயு 5:36

உன் சிரசின் பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், அதின் ஒரு மயிரையாவது வெண்மையாக்கவும் கறுப்பாக்கவும் உன்னால் கூடாதே.

மத்தேயு 5:37

உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்.

மத்தேயு 5:38

கண்ணுக்குக் கண், பல்லுக்கு பல் என்று உரைக்கப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.

Start Downloading Your Apps