ஐயனே இவர்க்‌ காசி ஈகுவாய்‌

ஐயனே! இவர்க்‌ காசி ஈகுவாய்‌,
மெய்யாய்‌ உன்னைச்‌ சார-என்றும்‌

பொய்யா மிவ்வுல காசை யைவிட்டு,
மெய்யாய்‌ உன்னைச்‌ சார-என்றும்‌ - ஐயனே!

சரணங்கள்‌

1. பாவ முஞ்செக சால மும்விட்டுப்‌
பனுவ லிரைப்‌ படியே,-வெகு
ஆவலாயுன தருளி னாலுயிர்‌
அடையக்‌ கதி யடைய-என்றும்‌ - ஐயனே!

2. நற்று தி செயும்‌ பத்த ராயுன்றன்‌
பொற்றா ளிணை போற்றி!-ஓங்கு
சற்கு ணமுமெய்‌ வாழ்வு மேபெற்றுச்‌
சான்றோர்‌ நெறிசார-என்றும்‌ - ஐயனே!

3. இன்று தொட்டிவர்‌ என்று மேயுனைச்‌
சென்றே எங்குங்‌ கூறிப்‌,-பயன்‌
நன்றி பெற்றுயர்‌ வென்றி யுற்றினி
ஒன்றி யுயர்ந்த தோங்க-என்றும்‌ - ஐயனே!

4. அன்று சீடராய்ப்‌ பன்னி ருவரை
அழைத்தாய்‌, தயை விழைத்தாய்‌;-இவர்‌
என்றுஞ்‌ சபையில்‌ ஒன்றி வைகிட
நின்றுன்‌ கிருபை ஈவாய்‌-என்றும்‌ - ஐயனே!

Start Downloading Your Apps