விந்தை கிறிஸ்தேசு ராசா

விந்தை கிறிஸ்தேசு ராசா!
உந்தஞ்‌ சிலுவை என்‌ மேன்மை.

சுந்தர மிகும்‌ இந்த பூவில்‌
எந்த மேன்மைகள்‌ எனக்கிருப்பினும்‌ - விந்தை

சரணங்கள்‌
1. திரண்ட ஆஸ்தி, உயர்ந்த கல்வி,
செல்வாக்குகள்‌ மிக விருப்பினும்‌,
குருசை நோக்கி பார்க்க எனக்‌
குரிய பெருமை யாவும்‌ அற்பமே. - விந்தை

2. உம்‌ குருசே ஆசிக்கெல்லாம்‌
ஊற்றாம்‌, வற்றா ஜீவ நதியாம்‌
துங்க இரத்த ஊற்றில்‌ மூழ்கித்‌
தூய்மையடைந்தே மேன்மையாகினேன்‌ - விந்தை

3. சென்னி, விலா, கை, கானின்று
சிந்துதோ! துயரோடன்பு;
மன்னா, இதைப்‌ போன்ற காட்சி
எந்நாளிலுமே எங்கும்‌ காணேன்‌. - விந்தை

4. இந்த விந்தை அன்புக்‌ கீடாய்‌
என்ன காணிக்கை ஈந்திடுவேன்‌;
எந்த அரும்‌ பொருள்‌ ஈடாகும்‌?
என்னை முற்றிலும்‌ உமக்களிக்கிறேன்‌. - விந்தை

- அருள்திறா. வே. சந்தியாகு

Start Downloading Your Apps