பஞ்சுநூல், அல்லது ஆட்டுமயிரான பாவிலாவது, ஊடையிலாவது, ஒரு தோலிலாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவிலாவது குஷ்டதோஷம் தோன்றி,
வஸ்திரத்திலாவது, தோலிலாவது, பாவிலாவது, ஊடையிலாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவிலாவது குஷ்டதோஷம் பச்சையாயாவது சிவப்பாயாவது காணப்பட்டால் அது குஷ்டமாயிருக்கும்; அதை ஆசாரியனுக்குக் காண்பிக்கவேண்டும்.
ஆசாரியன் அதைப் பார்த்து, ஏழுநாள் அடைத்துவைத்து,
ஏழாம் நாளிலே அதைப் பார்க்கக்கடவன்; வஸ்திரத்திலாவது, பாவிலாவது, ஊடையிலாவது, தோலிலாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவிலாவது அது அதிகப்பட்டிருந்தால், அது அரிக்கிற குஷ்டம்; அது தீட்டாயிருக்கும்.
அந்தத் தோஷம் இருக்கிற ஆட்டுமயிரினாலும் பஞ்சுநூலினாலும் செய்த வஸ்திரத்தையும் பாவையும், ஊடையையும், தோலினால் செய்த எந்தவித வஸ்துவையும் சுட்டெரிக்கக்கடவன்; அது அரிக்கிற குஷ்டம்; ஆகையால் அக்கினியில் சுட்டெரிக்கப்படவேண்டும்.
வஸ்திரத்தின் பாவிலாவது, ஊடையிலாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவிலாவது, அந்தத் தோஷம் அதிகப்படவில்லை என்று ஆசாரியன் கண்டால்,
அப்பொழுது ஆசாரியன் அதைக் கழுவச்சொல்லி, இரண்டாந்தரம் ஏழு நாள் அடைத்துவைத்து,
அது கழுவப்பட்டபின்பு, அதைப் பார்க்கக்கடவன்; அந்தத் தோஷம் அதிகப்படாதிருந்தாலும் அது நிறம் மாறாததாயிருந்தால் தீட்டாயிருக்கும்; அக்கினியில் அதைச் சுட்டெரிக்கவேண்டும்; அது அவ்வஸ்திரத்தின் உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் உருவ அரிக்கும்.
கழுவப்பட்டபின்பு அது குறுகிற்றென்று ஆசாரியன் கண்டானேயாகில், அதை வஸ்திரத்திலாவது, தோலிலாவது, பாவிலாவது, ஊடையிலாவது இராதபடிக்கு எடுத்துப்போடவேண்டும்.
அது இன்னும் வஸ்திரத்திலாவது, பாவிலாவது, ஊடையிலாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவிலாவது காணப்பட்டால், அது படருகிற தோஷம்; ஆகையினால் அது உள்ளதை அக்கினியில் சுட்டெரிக்கவேண்டும்.
வஸ்திரத்தின் பாவாவது, ஊடையாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவாவது கழுவப்பட்டபின்பு, அந்தத் தோஷம் அதைவிட்டுப் போயிற்றேயானால், இரண்டாந்தரம் கழுவப்படவேண்டும்; அப்பொழுது சுத்தமாயிருக்கும்.
ஆட்டுமயிராலாகிலும் பஞ்சுநூலாகிலும் நெய்த வஸ்திரத்தையாவது, பாவையாவது, ஊடையையாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவையாவது, சுத்தமென்றாவது தீட்டென்றாவது தீர்க்கிறதற்கு, அதினுடைய குஷ்டதோஷத்துக்கடுத்த பிரமாணம் இதுவே என்றார்.
பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
குஷ்டரோகியினுடைய சுத்திகரிப்பின் நாளில் அவனுக்கடுத்த பிரமாணம் என்னவென்றால்: அவன் ஆசாரியனிடத்தில் கொண்டுவரப்படவேண்டும்.
ஆசாரியன் பாளயத்துக்குப் புறம்பே போய்; குஷ்டரோகியின் குஷ்டவியாதி சொஸ்தமாயிற்று என்று கண்டால்,
சுத்திகரிக்கப்படவேண்டியவனுக்காக, உயிரோடிருக்கும் சுத்தமான இரண்டு குருவிகளையும், கேதுருக் கட்டையையும், சிவப்புநூலையும், ஈசோப்பையும் வாங்கிவரக் கட்டைளையிடக்கடவன்.
பின்பு, ஆசாரியன் அந்தக் குருவிகளில் ஒன்றை ஒரு மண்பாண்டத்திலுள்ள ஊற்றுநீர்மேல் கொல்லச் சொல்லி,
உயிருள்ள குருவியையும், கேதுருக் கட்டையையும், சிவப்புநூலையும், ஈசோப்பையும் எடுத்து, இவைகளையும் உயிருள்ள குருவியையும் ஊற்றுநீர்மேல் கொல்லப்பட்ட குருவியின் இரத்தத்திலே தோய்த்து,
குஷ்டம் நீங்கச் சுத்திகரிக்கப்படுகிறவன்மேல் ஏழுதரம் தெளித்து, அவனைச் சுத்தம்பண்ணி, உயிருள்ள குருவியை வெளியிலே விட்டுவிடக்கடவன்.
சுத்திகரிக்கப்படுகிறவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தன் மயிர் முழுவதையும் சிரைத்து, தான் சுத்தமாகும்படி ஜலத்தில் ஸ்நானம்பண்ணி, பின்பு பாளயத்தில் பிரவேசித்து, தன் கூடாரத்துக்குப் புறம்பே ஏழுநாள் தங்கி,
ஏழாம் நாளிலே தன் தலையையும் தாடியையும் புருவங்களையும் தன்னுடைய மயிர் முழுவதையும் சிரைத்து, தன் வஸ்திரங்களைத் தோய்த்து, ஜலத்தில் ஸ்நானம்பண்ணவேண்டும்; அப்பொழுது சுத்தமாயிருப்பான்.
எட்டாம்நாளிலே அவன் பழுதற்ற இரண்டு ஆட்டுக்குட்டிகளையும், ஒருவயதான பழுதற்ற ஒரு பெண்ணாட்டுக்குட்டியையும், போஜனபலிக்காக எண்ணெயிலே பிசைந்த ஒரு மரக்காலில் பத்தில் மூன்று பங்காகிய மெல்லிய மாவையும், ஆழாக்கு எண்ணெயையும் கொண்டுவரக்கடவன்.
சுத்திகரிக்கிற ஆசாரியன் சுத்திகரிக்கப்படும் மனிதனையும் அவ்வஸ்துக்களையும் ஆசரிப்புக் கூடாரவாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் நிறுத்தக்கடவன்.
பின்பு, ஆசாரியன் ஒரு ஆட்டுக்குட்டியைப் பிடித்து, அதையும் அந்த ஆழாக்கு எண்ணெயையும் குற்றநிவாரணபலியாகக் கொண்டுவந்து, கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டி,
பாவநிவாரணபலியும் சர்வாங்க தகனபலியும் இடும் பரிசுத்த ஸ்தலத்திலே அந்த ஆட்டுக்குட்டியைக் கொல்லக்கடவன்; குற்றநிவாரணபலி பாவநிவாரணபலியைப்போல ஆசாரியனுக்கு உரியது; அது மகா பரிசுத்தமானது.