ரேகூம், அஷபனா, மாசெயா,
அகியா, கானான், ஆனான்,
மல்லூக், ஆரிம், பானா என்பவர்களுமே.
ஜனங்களில் மற்றவர்களாகிய ஆசாரியரும், லேவியரும், வாசல் காவலாளரும், பாடகரும், நிதனீமியரும், தேசங்களின் ஜனங்களைவிட்டுப் பிரிந்து விலகி தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குத் திரும்பின அனைவரும், அவர்கள் மனைவிகளும், அவர்கள் குமாரரும் அவர்கள் குமாரத்திகளுமாகிய அறிவும் புத்தியும் உள்ளவர்களெல்லாரும்,
தங்களுக்குப் பெரியவர்களாகிய தங்கள் சகோதரரோடே கூடிக்கொண்டு: தேவனுடைய தாசனாகிய மோசேயைக்கொண்டு கொடுக்கப்பட்ட தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்படி நடந்துகொள்வோம் என்றும், எங்கள் ஆண்டவராகிய கர்த்தரின் கற்பனைகளையும் சகல நீதிநியாயங்களையும், கட்டளைகளையும் எல்லாம் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வோம் என்றும்,
நாங்கள் எங்கள் குமாரத்திகளை தேசத்தின் ஜனங்களுக்குக் கொடாமலும், எங்கள் குமாரருக்கு அவர்கள் குமாரத்திகளைக் கொள்ளாமலும் இருப்போம் என்றும்,
தேசத்தின் ஜனங்கள் ஓய்வுநாளிலே சரக்குகளையும், எந்தவிதத் தானியதவசத்தையும் விற்கிறதற்குக் கொண்டுவந்தால், நாங்கள் அதை ஓய்வுநாளிலும் பரிசுத்தநாளிலும் அவர்கள் கையில் கொள்ளாதிருப்போம் என்றும், நாங்கள் ஏழாம் வருஷத்தை விடுதலை வருஷமாக்கிச் சகல கடன்களையும் விட்டுவிடுவோம் என்றும் ஆணையிட்டுப் பிரமாணம்பண்ணினார்கள்.
மேலும்: நாங்கள் எங்கள் தேவனுடைய ஆலயத்தின் ஆராதனைக்காக சமுகத்தப்பங்களுக்கும், நித்திய போஜனபலிக்கும் ஓய்வுநாட்களிலும் மாதப்பிறப்புகளிலும் செலுத்தும் நித்திய சர்வாங்க தகனபலிகளுக்கும், பண்டிகைகளுக்கும், பிரதிஷ்டையான பொருள்களுக்கும், இஸ்ரவேலுக்காக பாவநிவிர்த்தி உண்டாக்கும் பலிகளுக்கும்,
எங்கள் தேவனுடைய ஆலயத்தின் சகல வேலைக்கும், வருஷந்தோறும் நாங்கள் சேக்கலில் மூன்றில் ஒரு பங்கைக் கொடுப்போம் என்கிற கடனை எங்கள்மேல் ஏற்றுக்கொண்டோம்.
நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியே எங்கள் தேவனாகிய கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் எரிகிறதற்காக, குறிக்கப்பட்ட காலங்களில் வருஷாவருஷம் எங்கள் பிதாக்களுடைய குடும்பங்களின்படியே, எங்கள் தேவனுடைய ஆலயத்துக்குக் கொண்டுவரவேண்டிய விறகு காணிக்கைக்காகவும், ஆசாரியருக்கும், லேவியருக்கும், ஜனத்துக்கும் சீட்டுப்போட்டோம்.
நாங்கள் வருஷந்தோறும் எங்கள் தேவனுடைய ஆலயத்துக்கு எங்கள் தேசத்தின் முதற்பலனையும், சகலவித விருட்சங்களின் எல்லா முதற்கனிகளையும் கொண்டுவரவும்,
நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியே, எங்கள் குமாரரில் முதற்பேறுகளையும், எங்கள் ஆடுமாடுகளாகிய மிருகஜீவன்களின் தலையீற்றுகளையும், எங்கள் தேவனுடைய ஆலயத்துக்கும் எங்கள் தேவனுடைய ஆலயத்திலே ஊழியஞ்செய்கிற ஆசாரியரிடத்துக்கும் கொண்டுவரவும்,
நாங்கள் எங்கள் பிசைந்தமாவில் முதற்பாகத்தையும், எங்கள் படைப்புகளையும், சகல மரங்களின் முந்தின பலனாகிய திராட்சப்பழரசத்தையும் எண்ணெயையும், எங்கள் தேவனுடைய ஆலயத்தின் அறைகளில் வைக்கும்படி ஆசாரியரிடத்துக்கும், எங்கள் நிலப்பயிர்களில் தசமபாகம் லேவியரிடத்திற்கும் கொண்டுவரவும், லேவியராகிய இவர்கள் எங்கள் வெள்ளாண்மையின் பட்டணங்களிலெல்லாம் தசமபாகம் சேர்க்கவும்,
லேவியர் தசமபாகம் சேர்க்கும்போது ஆரோனின் குமாரனாகிய ஒரு ஆசாரியன் லேவியரோடேகூட இருக்கவும், தசமபாகமாகிய அதிலே லேவியர் பத்தில் ஒரு பங்கை எங்கள் தேவனுடைய ஆலயத்திலுள்ள பொக்கிஷ அறைகளில் கொண்டுவரவும் திட்டம்பண்ணிக்கொண்டோம்.
பரிசுத்த ஸ்தலத்தின் பணிமுட்டுகளும், ஊழியஞ்செய்கிற ஆசாரியரும் வாசல் காவலாளரும், பாடகரும் இருக்கிற அந்த அறைகளிலே இஸ்ரவேல் புத்திரரும் லேவிபுத்திரரும் தானியம் திராட்சரசம் எண்ணெய் என்பவைகளின் படைப்புகளைக் கொண்டுவரவேண்டியது; இவ்விதமாய் நாங்கள் எங்கள் தேவனுடைய ஆலயத்தைப் பராமரியாமல் விடுவதில்லையென்று திட்டம்பண்ணிக்கொண்டோம்.
ஜனத்தின் அதிகாரிகள் எருசலேமிலே குடியிருந்தார்கள்; மற்ற ஜனங்கள், தங்களுக்குள்ளே பத்துப்பேரில் ஒருவனை எருசலேமென்னும் பரிசுத்த நகரத்திலும் ஒன்பதுபேரை மற்றப் பட்டணங்களிலும் குடியிருக்கப்பண்ண, சீட்டுகளைப் போட்டார்கள்.
ஆனாலும் எருசலேமிலே குடியிருக்க மனப்பூர்வமாய்ச் சம்மதித்த மனுஷர்களையெல்லாம் ஜனங்கள் வாழ்த்தினார்கள்.
யூதாவின் பட்டணங்களில் இஸ்ரவேலரும், ஆசாரியரும், லேவியரும், நிதனீமியரும், சாலொமோனுடைய வேலைக்காரரின் புத்திரரும், அவரவர் தங்கள் பட்டணங்களிலுள்ள தங்கள் காணிபூமியிலே குடியிருந்தார்கள்; எருசலேமிலே குடியிருந்த நாடுகளின் தலைவர் யாரென்றால்:
எருசலேமிலே யூதா புத்திரரில் சிலரும், பென்யமீன் புத்திரரில் சிலரும் குடியிருந்தார்கள்; யூதா புத்திரரிலே பேரேசின் புத்திரருக்குள் ஒருவனான மகலாலெயேலின் குமாரனாகிய செபதியாவின் குமாரன் அமரியாவுக்குப் பிறந்த சகரியாவுக்குக் குமாரனான உசியாவின் மகன் அத்தாயாவும்,
சீலோனின் குமாரன் சகரியாவுக்குக் குமாரனாகிய யோயாரிபுக்குக் குமாரனான அதாயாவுக்குப் பிறந்த அசாயாவின் குமாரன் கொல்லோசே பெற்ற பாருக்கின் மகன் மாசெயாவுமே.
எருசலேமிலே குடியிருக்கிற பேரேசின் புத்திரரெல்லாரும் நானூற்று அறுபத்தெட்டுப் பராக்கிரமசாலிகளாயிருந்தார்கள்.
பென்யமீன் புத்திரரில் யாரென்றால், சல்லு என்பவன்; இவன் மெசுல்லாமுக்கும், இவன் யோவேலுக்கும், இவன் பெதாயாவுக்கும், இவன் கொலாயாவுக்கும், இவன் மாசெயாவுக்கும், இவன் இதியேலுக்கும், இவன் எசாயாவுக்கும் குமாரனானவன்.
அவனுக்குப்பின் கப்பாய், சல்லாய் முதலானவர்கள் தொளாயிரத்து இருபத்தெட்டுப்பேர்.
அவர்கள்மேல் விசாரிப்புக்காரனான சிக்ரியின் குமாரன் யோவேலும், பட்டணத்தின்மேல் இரண்டாவது விசாரிப்புக்காரனான செனுவாவின் குமாரன் யூதாவுமே.
ஆசாரியர்களில் யோயாரிபின் குமாரன் யெதாயா, யாகின் என்பவர்களும்,