அவன் தன் பிதாக்களின் தேவர்களை மதியாமலும், ஸ்திரீகளின் சிநேகத்தையும், எந்த தேவனையும் மதியாமலும், எல்லாவற்றிற்கும் தன்னைப் பெரியவனாக்கி,
அரண்களின் தேவனைத் தன் ஸ்தானத்திலே கனம்பண்ணி, தன் பிதாக்கள் அறியாத ஒரு தேவனைப் பொன்னினாலும், வெள்ளியினாலும், இரத்தினங்களினாலும், உச்சிதமான வஸ்துக்களினாலும் கனம்பண்ணுவான்.
அவன் அரணிப்பான கோட்டைகளுக்காகவும், அந்நிய தேவனுக்காகவும் செய்வது என்னவென்றால், அவைகளை மதிக்கிறவர்களுக்கு மகா கனமுண்டாக்கி, அவர்கள் அநேகரை ஆளும்படிச் செய்து, அவர்களுக்கு தேசத்தைக் கிரயத்துக்காகப் பங்கிடுவான்.
முடிவுகாலத்திலோவென்றால், தென்றிசை ராஜா அவனோடே முட்டுக்கு நிற்பான்; வடதிசை ராஜாவும் இரதங்களோடும் குதிரைவீரர்களோடும் அநேகம் கப்பல்களோடும் சூறைக்காற்றுபோல் அவனுக்கு விரோதமாய் வருவான்; அவன் தேசங்களுக்குள் பிரவேசித்து, அவைகளைப் பிரவாகித்துக் கடந்துபோவான்.
அவன் சிங்காரமான தேசத்திலும் வருவான்; அப்பொழுது அநேக தேசங்கள் கவிழ்க்கப்படும்; ஆனாலும் ஏதோமும், மோவாபும், அம்மோன் புத்திரரில் பிரதானமானவர்களும் அவன் கைக்குத் தப்பிப்போவார்கள்.
அவன் தேசங்களின்மேல் தன் கையை நீட்டுவான்; எகிப்துதேசம் தப்புவதில்லை.
எகிப்தினுடைய பொன்னும் வெள்ளியுமான ஐசுவரியங்களையும் உச்சிதமான எல்லா வஸ்துக்களையும் ஆண்டுகொள்ளுவான்; லீபியரும் எத்தியோப்பியரும் அவனுக்குப் பின்செல்லுவார்கள்.
ஆனாலும் கிழக்கிலும் வடக்கிலும் இருந்து வரும் செய்திகள் அவனைக் கலங்கப்பண்ணும்; அப்பொழுது அவன் அநேகரை அழிக்கவும் சங்காரம்பண்ணவும் மகா உக்கிரத்தோடே புறப்பட்டுப்போய்,
சமுத்திரங்களுக்கு இடையிலுள்ள சிங்காரமான பரிசுத்த பர்வதத்தண்டையிலே தன் அரமனையாகிய கூடாரங்களைப் போடுவான்; ஆனாலும் அவனுக்கு ஒத்தாசை பண்ணுவாரில்லாமல், அவன் முடிவடைவான்.
உன் ஜனத்தின் புத்திரருக்காக நிற்கிற பெரிய அதிபதியாகிய மிகாவேல் அக்காலத்திலே எழும்புவான்; யாதொரு ஜாதியாரும் தோன்றினதுமுதல் அக்காலமட்டும் உண்டாயிராத ஆபத்துக்காலம் வரும்; அக்காலத்திலே புஸ்தகத்தில் எழுதியிருக்கிறவர்களாகக் காணப்படுகிற உன் ஜனங்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள்.
பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்தியஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள்.
ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள்.
தானியேலாகிய நீயோவென்றால், முடிவுகாலமட்டும் இந்த வார்த்தைகளைப் புதைபொருளாக வைத்து வைத்து, இந்தப் புஸ்தகத்தை முத்திரைபோடு; அப்பொழுது அநேகர் இங்கும் அங்கும் ஓடி ஆராய்வார்கள், அறிவும் பெருகிப்போம் என்றான்.
அப்பொழுது, தானியேலாகிய நான் ஆற்றுக்கு இக்கரையில் ஒருவனும் ஆற்றுக்கு அக்கரையில் ஒருவனுமாகிய வேறே இரண்டுபேர் நிற்கக்கண்டேன்.
சணல்வஸ்திரம் தரித்தவரும், ஆற்றின் தண்ணீர்களின்மேல் நிற்கிறவருமாகிய புருஷனை ஒருவன் நோக்கி: இந்த ஆச்சரியமானவைகளின் முடிவுவர எவ்வளவுகாலம் செல்லும் என்று கேட்டான்.
அப்பொழுது சணல்வஸ்திரம் தரித்தவரும் ஆற்றின் தண்ணீர்களின்மேல் நிற்கிறவருமாகிய புருஷன் தம்முடைய வலதுகரத்தையும் தம்முடைய இடதுகரத்தையும் வானத்துக்கு நேராக ஏறெடுத்து, ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமும் செல்லும் என்றும்; பரிசுத்த ஜனங்களின் வல்லமையைச் சிதறடித்தல் முடிவுபெறும்போதே இவைகளெல்லாம் நிறைவேறித் தீருமென்றும் என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவர்பேரில் ஆணையிடக் கேட்டேன்.
நான் அதைக் கேட்டும், அதின் பொருளை அறியவில்லை; ஆகையால்: என் ஆண்டவனே, இவைகளின் முடிவு என்னமாயிருக்கும் என்று கேட்டேன்.
அதற்கு அவன்: தானியேலே, போகலாம்; இந்த வார்த்தைகள் முடிவுகாலமட்டும் புதைபொருளாக வைக்கப்பட்டும் முத்திரிக்கப்பட்டும் இருக்கும்.
அநேகர் சுத்தமும் வெண்மையுமாக்கப்பட்டு, புடமிடப்பட்டவர்களாய் விளங்குவார்கள்; துன்மார்க்கரோ துன்மார்க்கமாய் நடப்பார்கள்; துன்மார்க்கரில் ஒருவனும் உணரான், ஞானவான்களோ உணர்ந்துகொள்ளுவார்கள்.
அன்றாடபலி நீக்கப்பட்டு, பாழாக்கும் அருவருப்பு ஸ்தாபிக்கப்படுங்காலமுதல் ஆயிரத்திருநூற்றுத் தொண்ணூறு நாள் செல்லும்.
ஆயிரத்து முந்நூற்று முப்பத்தைந்து நாள்மட்டும் காத்திருந்து சேருகிறவன் பாக்கியவான்.
நீயோவென்றால் முடிவுவருமட்டும் போயிரு; நீ இளைப்பாறிக்கொண்டிருந்து, நாட்களின் முடிவிலே உன் சுதந்தர வீதத்துக்கு எழுந்திருப்பாய் என்றான்.
யூதாதேசத்து ராஜாக்களாகிய உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்பவர்களின் நாட்களிலும், யோவாசின் குமாரனாகிய யெஸ்ரயேலின் ராஜாவாகிய யெரொபெயாம் என்பவனின் நாட்களிலும், பெயேரியின் குமாரனாகிய ஓசியாவுக்கு உண்டான கர்த்தருடைய வசனம்.
கர்த்தர் ஓசியாவைக்கொண்டு உரைக்கத்தொடங்கினபோது, கர்த்தர் ஓசியாவை நோக்கி: நீ போய், ஒரு சோர ஸ்திரீயையும் சோரப்பிள்ளைகளையும் உன்னிடமாகச் சேர்த்துக்கொள்; தேசம் கர்த்தரை விட்டு விலகிச் சோரம்போயிற்று என்றார்.
அவன் போய், திப்லாயிமின் குமாரத்தியாகிய கோமேரைச் சேர்த்துக்கொண்டான்; அவள் கர்ப்பந்தரித்து, அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்.