ஐயரே நீர்‌ தங்கும்‌ என்னிடம்‌

ஐயரே, நீர்‌ தங்கும்‌ என்னிடம்‌,
ஐயரே, நீர்‌ தங்கும்‌!-இப்போது
அந்திநேரம்‌ பொழு தஸ்தமித்தாச்சே,
ஐயா, நீர்‌ இரங்கும்‌.

2. பகல்முழுவதும்‌ காத்தீர்‌, சென்ற
பகல்‌ முழுவதும்‌ காத்தீர்‌,-தோத்திரம்‌!
பரமனே, இந்த இரவிலும்‌ வாரும்‌,
பாவியை நீர்‌ காரும்‌!

3. தங்கா தொருபொருளும்‌ என்னிடம்‌,
தங்கா தொருபொருளும்‌;-யேசு
தற்பரனே, நீர்‌ ஒருவரே யென்னில்‌
தங்கித்‌ தயைபுரியும்‌.

4. உயிரே துமையன்றிப்‌ பாவிக்‌
குயிரே துமையன்றி?-என்றன்‌
உடல்‌ உயிர்‌ உம்மால்‌ உய்கிறதையா,
உத்தமனே, தங்கும்‌.

5. நீர்‌ தங்கிடும்‌ வீட்டில்‌, யேசுவே,
நீர்‌ தங்கிடும்‌ வீட்டில்‌,-எல்லாம்‌
நிறைவே குறைவுண்டாமோ, கர்த்தா?
நின்னை விடமாட்டேன்‌.

6. என்பாவம்‌ மனியும்‌, இறையே,
என்பாவம்‌ மனியும்‌;-அப்போ
எளியேன்‌ உம்மோ டயர்வேன்‌, இரவில்‌
எனக்கோர்‌ திகிலேது?

7. எனக்கு நீர்காவல்‌, என்றும்‌
எனக்கு நீர்காவல்‌;- என்றன்‌
இனத்தார்‌ ஜனத்தார்‌ எளியோர்‌ வலியோர்‌
எல்லாவர்க்குங்‌ காவல்‌.

8. உம்மோடே படுப்பேன்‌, ஐயா,
உம்மோடே படுப்பேன்‌;-இரவில்‌
உம்மோ டயர்வேன்‌, சேதமில்லாமல்‌
உம்மோ டெழுந்திருப்பேன்‌.

- அருள்திரு. ஞா. சாமுவேல்‌

Start Downloading Your Apps