செத்துப்போனவனுடைய பிரேதத்தைத் தொட்டவன் ஏழுநாள் தீட்டுப்பட்டிருப்பான்.
அவன் மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் தீட்டுக்கழிக்கும் ஜலத்தினால் தன்னைச் சுத்திகரிக்கக்கடவன்; அப்பொழுது சுத்தமாவான்; மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் தன்னைச் சுத்திகரிக்காமலிருப்பானாகில் சுத்தமாகான்.
செத்தவனுடைய பிரேதத்தைத் தொட்டும், தன்னைச் சுத்திகரித்துக்கொள்ளாதவன் கர்த்தரின் வாசஸ்தலத்தைத் தீட்டுப்படுத்துகிறான்; அந்த ஆத்துமா இஸ்ரவேலில் இராமல் அறுப்புண்டுபோவான்; தீட்டுக்கழிக்கும் ஜலம் அவன்மேல் தெளிக்கப்படாததினால், அவன் தீட்டுப்பட்டிருப்பான்; அவன் தீட்டு இன்னும் அவன்மேல் இருக்கும்.
கூடாரத்தில் ஒரு மனிதன் செத்தால், அதற்கடுத்த நியமமாவது: அந்தக் கூடாரத்தில் பிரவேசிக்கிற யாவரும் கூடாரத்தில் இருக்கிற யாவரும் ஏழுநாள் தீட்டுப்பட்டிருப்பார்கள்.
மூடிக் கட்டப்படாமல் திறந்திருக்கும் பாத்திரங்கள் எல்லாம் தீட்டுப்பட்டிருக்கும்.
வெளியிலே பட்டயத்தால் வெட்டுண்டவனையாவது, செத்தவனையாவது, மனித எலும்பையாவது, பிரேதக்குழியையாவது, தொட்டவன் எவனும் ஏழுநாள் தீட்டுப்பட்டிருப்பான்.
ஆகையால் தீட்டுப்பட்டவனுக்காக, பாவத்தைப் பரிகரிக்கும் கிடாரியின் சாம்பலிலே கொஞ்சம் எடுத்து, ஒரு பாத்திரத்தில் போட்டு, அதின்மேல் ஊற்று ஜலம் வார்க்கவேண்டும்.
சுத்தமான ஒருவன் ஈசோப்பை எடுத்து, அந்த ஜலத்திலே தோய்த்து, கூடாரத்தின்மேலும் அதிலுள்ள சகல பணிமுட்டுகளின்மேலும் அங்கேயிருக்கிற ஜனங்களின்மேலும் தெளிக்கிறதுமல்லாமல், எலும்பையாகிலும் வெட்டுண்டவனையாகிலும் செத்தவனையாகிலும் பிரேதக்குழியையாகிலும் தொட்டவன்மேலும் தெளிக்கக்கடவன்.
சுத்தமாயிருக்கிறவன் தீட்டுப்பட்டவன்மேல் மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் தெளிக்கவேண்டும்; ஏழாம் நாளில் இவன் தன்னைச் சுத்திகரித்து, தன் வஸ்திரங்களைத் தோய்த்து, ஜலத்தில் ஸ்நானம்பண்ணி, சாயங்காலத்திலே சுத்தமாயிருப்பான்.
தீட்டுப்பட்டிருக்கிறவன் தன்னைச் சுத்திகரித்துக்கொள்ளாதிருந்தால், அவன் சபையில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்; அவன் கர்த்தரின் பரிசுத்த ஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தினான்; தீட்டுக்கழிக்கும் ஜலம் அவன்மேல் தெளிக்கப்படாததினால் அவன் தீட்டுப்பட்டிருக்கிறான்.
தீட்டுக்கழிக்கும் ஜலத்தைத் தெளிக்கிறவனும் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; தீட்டுக்கழிக்கும் ஜலத்தைத் தொட்டவனும் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.
தீட்டுப்பட்டிருக்கிறவன் தொடுகிறவைகளெல்லாம் தீட்டுப்படும், அவைகளைத் தொடுகிறவனும் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; இது உங்களுக்கு நித்திய கட்டளையாயிருக்கும் என்றார்.
இஸ்ரவேல் புத்திரரின் சபையார் எல்லாரும் முதலாம் மாதத்தில் சீன்வனாந்தரத்திலே சேர்ந்து, ஜனங்கள் காதேசிலே தங்கியிருக்கையில், மிரியாம் மரணமடைந்து, அங்கே அடக்கம்பண்ணப்பட்டாள்.
ஜனங்களுக்குத் தண்ணீர் இல்லாதிருந்தது; அப்பொழுது அவர்கள் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாகக் கூட்டங்கூடினார்கள்.
ஜனங்கள் மோசேயோடே வாக்குவாதம்பண்ணி: எங்கள் சகோதரர் கர்த்தருடைய சந்நிதியில் மாண்டபோது நாங்களும் மாண்டுபோயிருந்தால் நலமாயிருக்கும்.
நாங்களும் எங்கள் மிருகங்களும் இங்கே சாகும்படி, நீங்கள் கர்த்தரின் சபையை இந்த வனாந்தரத்திலே கொண்டுவந்தது என்ன;
விதைப்பும், அத்திமரமும், திராட்சச்செடியும், மாதளஞ்செடியும், குடிக்கத் தண்ணீரும் இல்லாத இந்த கெட்ட இடத்தில் எங்களைக் கொண்டுவரும்படி, நீங்கள் எங்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினது என்ன என்றார்கள்.
அப்பொழுது மோசேயும் ஆரோனும் சபையாரைவிட்டு, ஆசரிப்புக் கூடாரவாசலில் போய், முகங்குப்புற விழுந்தார்கள்; கர்த்தருடைய மகிமை அவர்களுக்குக் காணப்பட்டது.
கர்த்தர் மோசேயை நோக்கி:
நீ கோலை எடுத்துக்கொண்டு, நீயும் உன் சகோதரனாகிய ஆரோனும் சபையாரைக் கூடிவரச்செய்து, அவர்கள் கண்களுக்குமுன்னே கன்மலையைப் பார்த்துப் பேசுங்கள்; அப்பொழுது அது தன்னிடத்திலுள்ள தண்ணீரைக் கொடுக்கும்; இப்படி நீ அவர்களுக்குக் கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்படப்பண்ணி, சபையாருக்கும் அவர்கள் மிருகங்களுக்கும் குடிக்கக் கொடுப்பாய் என்றார்.
அப்பொழுது மோசே தனக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியே கர்த்தருடைய சந்நிதியிலிருந்த கோலை எடுத்தான்.
மோசேயும் ஆரோனும் சபையாரைக் கன்மலைக்கு முன்பாகக் கூடிவரச்செய்தார்கள்; அப்பொழுது மோசே அவர்களை நோக்கி: கலகக்காரரே, கேளுங்கள், உங்களுக்கு இந்தக் கன்மலையிலிருந்து நாங்கள் தண்ணீர் புறப்படப்பண்ணுவோமோ என்று சொல்லி,
தன் கையை ஓங்கி, கன்மலையைத் தன் கோலினால் இரண்டுதரம் அடித்தான்; உடனே தண்ணீர் ஏராளமாய்ப் புறப்பட்டது, சபையார் குடித்தார்கள்; அவர்கள் மிருகங்களும் குடித்தது.
பின்பு கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: இஸ்ரவேல் புத்திரரின் கண்களுக்கு முன்பாக என்னைப் பரிசுத்தம்பண்ணும்படி, நீங்கள் என்னை விசுவாசியாமற் போனபடியினால், இந்தச் சபையாருக்கு நான் கொடுத்த தேசத்திற்குள் நீங்கள் அவர்களைக் கொண்டுபோவதில்லை என்றார்.
இங்கே இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரோடே வாக்குவாதம்பண்ணினதினாலும், அவர்களுக்குள்ளே அவருடைய பரிசுத்தம் விளங்கினதினாலும் இது மேரிபாவின் தண்ணீர் என்னப்பட்டது.