தருணம்‌ இதுவே கிருபை கூரும்‌

தருணம்‌ இதுவே, கிருபை கூரும்‌,
வழிபாரும்‌, பதம்‌ தாரும்‌, தாரும்‌.

சரணங்கள்‌

1. கருணை தெய்வ குமாரா, கன மனுடவதாரா;
அருமை ரட்சக யேசு நாதா,-உல
கனைத்தும்‌ வணங்கும்‌ சத்ய வேதா,-உன்றன்‌
அடியர்க்‌ கருளும்‌ திருப்‌ பாதா,-சத்ப்ர
சாதா, நீதா! - தருணம்‌

2. வானத்திலிருந்து வந்த ஞானத்தொளி சிறந்த
மகிமைப்‌ பிரதாவின்‌ திருப்‌ பாலா,-ஆதி
மைந்தர்க்‌ கிரங்கும்‌ அனுகூலா,-கன
விந்தைக்‌ கருணை மனுவேலா,-மெய்ந்‌
நூலா, சீலா! - தருணம்‌

3. அற்ப உலக வாழ்வில்‌ அலைந்து, நிலை குலைந்து,
அலகைப்படு குழியில்‌ வீழ்ந்து,-தாழ்ந்து,
அஞ்சி அஞ்சி நலிந்‌ தேனே;-அடிமைக்‌
கஞ்சல்‌ என்றுசொல்லும்‌ கோனே,-சீ
மானே, தானே! - தருணம்‌

4. இந்த உலகத்‌ தெமைச்‌ சந்தித்‌ தனுக்கிரகித்த
சொந்தக்‌ கிருபைகள்‌ மா காத்ரம்‌,-அவை
சிந்தித்து மடியாவிச்‌ சேத்ரம்‌,-நிர்ப்‌
பந்த அடியர்கள்‌ எம்‌ மாத்ரம்‌!-பத
தோத்ரம்‌! தோத்ரம்‌! - தருணம்‌

- வேதநாயகம்‌ சாஸ்திரியார்‌

Start Downloading Your Apps