ஜகநாதா குரு பரநாதா திருஜகநாதா, குரு பரநாதா, திரு
அருள் நாதா, ஏசுபிரசாதா நாதா!
திகழுறுந் தாதா புகழுறும் பாதா,
தீதறும் வேத போதா! - செக
சரணங்கள்
1. முற்காலம் ஆதிமைந்தர் மோசப் பிசாசு தந்திர
மொய் கொண்டு கனியுண்ட பழியாலோ?
நற்காலம் நீ தெரிந்து, நவின்ற வண்ணம் பரிந்து,
நரதேவனாக வந்தாய் மொழியாலோ? - ஐகநாதா
2. எளிய வேஷந் தரித்தே இங் கவதரித்தாலும்,
இமையோர் வந்திறைஞ்சிடத் தெரிந்தாயே;
ஓளிசெய்யும் பணிமுடி உயர் மன்னர் தொழும்படி
உடு வழி காட்டிடப் புரிந்தாயே. - ஐகநாதா
3. அருந் தவன் கையில் தங்கி, அன்பின்பக் கடல் பொங்கி,
ஆலயத்தில் துதிக்க களித்தாயே,
வரும் தவ மதியால் முன் மற மன்னன் தேடிட, உன்
மலர் முகங் காட்டாமல் ஓளித்தாயே. - ஐகநாதா
4. மக்கள் உளக் களங்கம் மாசற்றொளி விளங்க,
மதுரப்பிரசங்கம் யார்க்கும் உரைத்தாயே;
சிக் கடர் துன் மனத்தைத் திருத்தி, அறத்தின் வித்தை
திருத் தயை கூர்ந் தெவர்க்கும் விதைத்தாயே. - ஜகநாதா
5. தனையர் வல் நோயைக்கண்ட தாயார் மருந்துட் கொண்ட
தகைமை எனப் பேரன்பு கூர்ந்தாயே;
வினையர் வெம் பாவக் கேடு விலக அரிய பாடு
மேவி அனுபவிக்க நேர்ந்தாயே. - ஐகநாதா
6. அமரர் முற்றும் அறியார், அடிகள் சற்றும் அறியார்,
ஆர் உன் திறல் அறிவார், கர்த்தாவே?
எமது பவம் பொறுத்தே, இரக்கம் எம்மேல் உகுத்தே,
எமைப் புரந்தாளும், மானப் பர்த்தாவே. - ஐகநாதா
- வீரமா முனிவர்