ஆச்சரியமான காட்சியைப்

ஆச்சரியமான காட்சியைப் பார்க்கலாம், வா - ஆ! கல்
வாரிச் சிலுவையில் வானவன் தொங்கின்ற
ஆச்சரியமான காட்சியைப் பார்க்கலாம். வா

சூட்சமுறு தேவ காட்சியாங் கற்பனை
துய்யத்தை நரர்மீறி - மகா
துர்க்குணப் பேயின் தந்திரத்தினால்
தூய்மைவிட்டனர், வாய்மைகெட்டனர்;
சுத்த கிறிஸ்தரசன் - தேவனுட
சித்தன். அமைசிரசன், மாந்தர்களின்
துன்பத்தைப் போக்கவும், இன்பத்தைச் சேர்க்கவும்
தோஷஞ் செய்பாதகன் வேஷமாய்த் தொங்குகின்ற - ஆச்சரிய

எருசலைநகர் மருவுங் கல்வாரி
என்னப்பட்ட ஒரு மேடு:- அதில்
ஏசுக்கிறிஸ்தெனும் நேசமகத்துவன்
எங்களுக்காய்ப்படும் பாடு - மரக்
குருசில் ஏறிய சிரசில் முண்முடி
கொண்டதும் நொந்ததும் நீடு - அப்போ
கொற்றவன் தன் முகம் சற்றேனுங் காட்டாத
குறையதும் ஒரு பீடு;
குருதி வடியவே, சுருதி முடியவே
பருதி மறையவே, திரையுங் கிழியவே.
கொலைஞர் அவமதிக்க, துஷ்டனாம்
அலகை மனங்கொதிக்க, கசப்புடன்
கோனே, என்னை நீர் ஏனோ கைவிட்டீர்?
கொடுக்கிறேன் ஜீவனை, எடுத்திடு மென்றழும் - ஆச்சரிய

பூலோகத்தாரே, இம்மேலான காட்சியின்
புண்ணியத்தை வந்து பாரும். - தேவ
புத்திரன் ரத்தமும் நீரும் நம்மை
மேலோகஞ் சேர்க்கின்ற சாலக்கிருபையின்
விஸ்தார ஊற்றென்று சேரும்; - அதில்
விழுந்து ஆத்துமம் முழுகிப் பாவந் தீ
வினை அகன்றிட வாரும்.
சீலமற்ற மாந்தர் கோல முற்ற வேந்தர்
ஜீவனதிபதி சாவினாலே நம்மைத்
தெய்வ லோகஞ் சேர்க்க - நித்தியமாய்
உய்யும் சுத்தோராக்க, சுத்த பிதா
செல்வக் கிறிஸ்தந்தக் கல்வாரி மேட்டினில்
ஜீவன் துடிக்கத்தம் ஆவி விடுகின்ற - ஆச்சரிய

Start Downloading Your Apps