அப்படியே யூதாவுடைய கையின் கீழிருந்த ஏதோமியர், இந்நாள்வரைக்கும் இருக்கிறதுபோல, கலகம்பண்ணினார்கள்; அக்காலத்தில் தானே லிப்னா பட்டணத்தாரும் கலகம்பண்ணினார்கள்.
யோராமின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
யோராம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தன் பிதாக்களிடத்திலே தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணப்பட்டான்; அவனுக்குப் பதிலாக அவன் குமாரனாகிய அகசியா ராஜாவானான்.
இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபின் குமாரன் யோராமுடைய பன்னிரண்டாம் வருஷத்திலே, யூதாவின் ராஜாவாகிய யோராமின் குமாரன் அகசியா ராஜாவானான்.
அகசியா ராஜாவாகிறபோது, இருபத்திரண்டு வயதாயிருந்து, ஒரே வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம்பண்ணினான்; இஸ்ரவேலின் ராஜாவாகிய ஒம்ரியின் குமாரத்தியான அவன் தாயின் பேர் அத்தாலியாள்.
அவன் ஆகாபுடைய வீட்டாரின் வழியே நடந்து, ஆகாபின் வீட்டாரைப்போல் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; அவன் ஆகாப் வீட்டாரோடே சம்பந்தங்கலந்திருந்தான்.
அவன் ஆகாபின் குமாரனாகிய யோராமோடேகூடக் கீலேயாத்திலுள்ள ராமோத்திற்குச் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலோடு யுத்தம்பண்ணப்போனான்; சீரியர் யோராமைக் காயப்படுத்தினார்கள்.
ராஜாவாகிய யோராம் தான் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலோடு யுத்தம் பண்ணுகையில், சீரியர் ராமாவிலே தன்னை வெட்டின காயங்களை ஆற்றிக் கொள்ள யெஸ்ரயேலுக்குப் போயிருந்தான்; ஆகாபின் குமாரனாகிய யோராம் வியாதியாயிருந்தபடியினால், யூதாவின் ராஜாவாகிய யோராமின் குமாரன் அகசியா யெஸ்ரயேலில் இருக்கிற அவனைப் பார்க்கிறதற்குப் போனான்.
அப்பொழுது தீர்க்கதரிசியாகிய எலிசா தீர்க்கதரிசிகளின் புத்திரரில் ஒருவனை அழைத்து: நீ இடைக்கட்டிக்கொண்டு, இந்தத் தைலக்குப்பியை உன் கையில் எடுத்துக்கொண்டு, கீலேயாத்திலுள்ள ராமோத்திற்குப் போ.
நீ அங்கே சேர்ந்தபோது, நிம்சியின் மகனான யோசபாத்தின் குமாரன் யெகூ எங்கே இருக்கிறான் என்று பார்த்து, அங்கே உட்பிரவேசித்து, அவனைத் தன் சகோதரரின் நடுவிலிருந்து எழுந்திருக்கப்பண்ணி, அவனை உள்ளான ஒரு அறையிலே அழைத்துக்கொண்டுபோய்,
தைலக்குப்பியை எடுத்து, அவன் தலையின்மேல் வார்த்து: உன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணினேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல்லி, கதவைத் திறந்து தாமதியாமல் ஓடிப்போ என்றான்.
அப்படியே தீர்க்கதரிசியின் ஊழியக்காரனாகிய அந்த வாலிபன் கீலேயாத்திலுள்ள ராமோத்திற்குப் போனான்.
அவன் உட்பிரவேசித்தபோது, சேனாபதிகள் அங்கே உட்கார்ந்திருந்தார்கள்; அப்பொழுது அவன்: சேனாபதியே, உமக்குச் சொல்லவேண்டிய ஒரு வார்த்தை உண்டு என்றான். அதற்கு யெகூ: எங்களெல்லாருக்குள்ளும் யாருக்கு என்று கேட்டதற்கு, அவன், சேனாபதியாகிய உமக்குத்தான் என்றான்.
அவன் எழுந்து, அறைவீட்டிற்குள் பிரவேசித்தான்; அவன் அந்தத் தைலத்தை அவன் தலையின்மேல் வார்த்து, அவனை நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், உன்னைக் கர்த்தருடைய ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணினேன்.
நான் என் ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளின் இரத்தப்பழியையும், கர்த்தருடைய சகல ஊழியக்காரரின் இரத்தப்பழியையும், யேசபேலின் கையிலே வாங்கும்படிக்கு நீ உன் ஆண்டவனாகிய ஆகாபின் குடும்பத்தை அழித்துவிடக்கடவாய்.
ஆகாபின் குடும்பமெல்லாம் அழியும்படிக்கு, நான் ஆகாபுக்குச் சுவரில் நீர் விடும் ஒரு நாய் முதலாய் இராதபடிக்கு, இஸ்ரவேலிலே அவனுடையவர்களில் அடைபட்டவனையும் விடுபட்டவனையும் கருவறுத்து,
ஆகாபின் குடும்பத்தை நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் குடும்பத்துக்கும், அகியாவின் குமாரனாகிய பாஷாவின் குடும்பத்துக்கும் சரியாக்குவேன்.
யேசபேலை யெஸ்ரயேலின் நிலத்திலே நாய்கள் தின்றுவிடும்; அவளை அடக்கம்பண்ணுகிறவன் இல்லையென்கிறார் என்று சொல்லி, கதவைத் திறந்து ஓடிப்போனான்.
யெகூ தன் ஆண்டவனுடைய ஊழியக்காரரிடத்துக்குத் திரும்பிவந்தபோது, அவர்கள் அவனை நோக்கி: சுகசெய்தியா? அந்தப் பயித்தியக்காரன் உன்னிடத்தில் வந்தது என்ன என்று கேட்டார்கள். அதற்கு அவன்: அந்த மனுஷனையும், அவன் சொன்ன காரியத்தையும் நீங்கள் அறிவீர்கள் என்றான்.
அதற்கு அவர்கள்: அது பொய், அதை எங்களுக்குச் சொல்லும் என்றார்கள். அப்பொழுது அவன்: நான் உன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணினேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று இன்ன இன்ன பிரகாரமாக என்னிடத்தில் சொன்னான் என்றான்.
அப்பொழுது அவர்கள் தீவிரமாய் அவரவர் தங்கள் வஸ்திரத்தைப் படிகளின் உயரத்தில் அவன் கீழே விரித்து, எக்காளம் ஊதி: யெகூ ராஜாவானான் என்றார்கள்.
அப்படியே நிம்சியின் மகனாகிய யோசபாத்தின் குமாரன் யெகூ என்பவன் யோராமுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணினான்; யோராமோ இஸ்ரவேலர் எல்லாரோடுங்கூட கீலேயாத்திலுள்ள ராமோத்திலே சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலினிமித்தம் காவல் வைத்து வைத்தான்.
ஆனாலும் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலோடே பண்ணின யுத்தத்திலே, சீரியர் தன்னை வெட்டின காயங்களை யெஸ்ரயேலிலே ஆற்றிக்கொள்ளுகிறதற்கு, ராஜாவாகிய யோராம் திரும்பிப்போயிருந்தான். யெகூ என்பவன்: இது உங்களுக்குச் சம்மதியாயிருந்தால் யெஸ்ரயேலில் இதை அறிவிக்கிறதற்கு ஒருவரும் பட்டணத்திலிருந்து தப்பிப்போகும்படி விடாதிருங்கள் என்றான்.
அப்பொழுது யெகூ இரதத்தின்மேல் ஏறி, யெஸ்ரயேலுக்கு நேராகப் போனான், யோராம் அங்கே வியாதியாய்க் கிடந்தான்; யோராமைப்பார்க்க, யூதாவின் ராஜாவாகிய அகசியாவும் அங்கே வந்திருந்தான்.
யெஸ்ரயேலில் கோபுரத்தின்மேல் நிற்கிற ஜாமக்காரன், யெகூவின் கூட்டம் வருகிறதைக் கண்டு: ஒரு கூட்டத்தைக் காண்கிறேன் என்றான். அப்பொழுது யோராம்: நீ ஒரு குதிரைவீரனைக் கூப்பிட்டு, அவர்களுக்கு எதிராக அனுப்பிச் சமாதானமா என்று கேட்கச்சொல் என்றான்.