நாலாவது ராஜ்யம் இரும்பைப்போல உரமாயிருக்கும்; இரும்பு எல்லாவற்றையும் எப்படி நொறுக்கிச் சின்னபின்னமாக்குகிறதோ, அப்படியே இது நொறுக்கிப்போடுகிற இரும்பைப்போல அவைகளையெல்லாம் நொறுக்கித் தகர்த்துப்போடும்.
பாதங்களும் கால்விரல்களும் பாதி குயவனின் களிமண்ணும், பாதி இரும்புமாயிருக்க நீர் கண்டீரே, அந்த ராஜ்யம் பிரிக்கப்படும்; ஆகிலும் களிமண்ணோடே இரும்பு கலந்திருக்க நீர் கண்டபடியே இரும்பினுடைய உறுதியில் கொஞ்சம் அதிலே இருக்கும்.
கால்விரல்கள் பாதி இரும்பும் பாதி களிமண்ணுமாயிருந்தது என்னவென்றால், அந்த ராஜ்யம் ஒருபங்கு உரமும் ஒருபங்கு நெரிசலுமாயிருக்கும்.
நீர் இரும்பைக் களிமண்ணோடே கலந்ததாகக் கண்டீரே, அவர்கள் மற்ற மனுஷரோடே சம்பந்தங்கலப்பார்கள்; ஆகிலும் இதோ, களிமண்ணோடே இரும்பு கலவாததுபோல அவர்கள் ஒருவரோடொருவர் ஒட்டிக்கொள்ளாதிருப்பார்கள்.
அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை; ஒரு கல் கையால் பெயர்க்கப்படாமல் மலையிலிருந்து பெயர்ந்து, உருண்டுவந்து, இரும்பையும் வெண்கலத்தையும் களிமண்னையும் வெள்ளியையும் பொன்னையும் நொறுக்கினதை நீர் கண்டீரே, அப்படியே அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.
இனிமேல் சம்பவிக்கப்போகிறதை மகா தேவன் ராஜாவுக்குத் தெரிவித்திருக்கிறார்; சொப்பனமானது நிச்சயம், அதின் அர்த்தம் சத்தியம் என்றான்.
அப்பொழுது ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் முகங்குப்புற விழுந்து, தானியேலை வணங்கி, அவனுக்குக் காணிக்கை செலுத்தவும் தூபங்காட்டவும் கட்டளையிட்டான்.
ராஜா தானியேலை நோக்கி: நீ இந்த மறைபொருளை வெளிப்படுத்தினபடியினால், மெய்யாய் உங்கள் தேவனே தேவர்களுக்கு தேவனும், ராஜாக்களுக்கு ஆண்டவரும், மறைபொருள்களை வெளிப்படுத்துகிறவருமாயிருக்கிறார் என்றான்.
பின்பு ராஜா தானியேலைப் பெரியவனாக்கி, அவனுக்கு அநேகம் சிறந்த வெகுமதிகளைக் கொடுத்து, அவனைப் பாபிலோன் மாகாணம் முழுதுக்கும் அதிபதியாகவும், பாபிலோனிலுள்ள சகல ஞானிகளின்மேலும் பிரதான அதிகாரியாகவும் நியமித்தான்.
தானியேல் ராஜாவை வேண்டிக்கொண்டதின்பேரில் அவன் சாத்ராக்கையும், மேஷாக்கையும், ஆபேத்நேகோவையும் பாபிலோன் மகாநகரத்துக் காரியங்களை விசாரிக்கும்படி வைத்தான்; தானியேலோவென்றால் ராஜாவின் கொலுமண்டபத்தில் இருந்தான்.
ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் அறுபதுமுழ உயரமும் ஆறுமுழ அகலமுமான ஒரு பொற்சிலையைப் பண்ணுவித்து, பாபிலோன் மாகாணத்திலிருக்கிற தூரா என்னும் சமபூமியிலே நிறுத்தினான்.
பின்பு ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் தேசாதிபதிகளையும், அதிகாரிகளையும், தலைவரையும், நியாயாதிபதிகளையும், பொக்கிஷக்காரரையும், நீதிசாஸ்திரிகளையும், விசாரிப்புக்காரரையும், நாடுகளிலுள்ள உத்தியோகஸ்தர் யாவரையும் நேபுகாத்நேச்சார் ராஜா நிறுத்தின சிலையின் பிரதிஷ்டைக்கு வந்து சேரும்படி அழைத்தனுப்பினான்.
அப்பொழுது தேசாதிபதிகளும், அதிகாரிகளும், தலைவரும், நியாயாதிபதிகளும், பொக்கிஷக்காரரும், நீதிசாஸ்திரிகளும், விசாரிப்புக்காரரும், நாடுகளின் உத்தியோகஸ்தர் யாவரும், ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்தின சிலையின் பிரதிஷ்டைக்கு வந்து சேர்ந்து, நேபுகாத்நேச்சார் நிறுத்தின சிலைக்கு எதிராக நின்றார்கள்.
கட்டியக்காரன் உரத்த சத்தமாய்: சகல ஜனங்களும், ஜாதிகளும், பாஷைக்காரருமானவர்களே, உங்களுக்கு அறிவிக்கப்படுகிறது என்னவென்றால்:
எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தை நீங்கள் கேட்கும்போது, நீங்கள் தாழவிழுந்து, ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்ளக்கடவீர்கள்.
எவனாகிலும் தாழ விழுந்து, அதைப் பணிந்துகொள்ளாமற்போனால், அவன் அந்நேரமே எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே போடப்படுவான் என்றான்.
ஆதலால் சகல ஜனங்களும், எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம் முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தைக் கேட்டவுடனே, சகல ஜனத்தாரும் ஜாதியாரும் பாஷைக்காரரும் தாழ விழுந்து, ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொண்டார்கள்.
அச்சமயத்தில் கல்தேயரில் சிலர் ராஜசமுகத்தில் வந்து, யூதர்பேரில் குற்றஞ்சாற்றி,
ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரை நோக்கி: ராஜாவே, நீர் என்றும் வாழ்க.
எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தையும் கேட்கிற எந்த மனுஷனும் தாழவிழுந்து, பொற்சிலையைப் பணிந்துகொள்ளவேண்டுமென்றும்,
எவனாகிலும் தாழ விழுந்து பணிந்துகொள்ளாமற்போனால், அவன் எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே போடப்படவேண்டுமென்றும், ராஜாவாகிய நீர் கட்டளையிட்டீரே.
பாபிலோன் மாகாணத்தின் காரியங்களை விசாரிக்கும்படி நீர் ஏற்படுத்தின சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்னும் யூதரான மனுஷர் இருக்கிறார்களே; அவர்கள் ராஜாவாகிய உம்மை மதிக்கவில்லை; அவர்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்யாமலும், நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்ளாமலும் இருக்கிறார்கள் என்றார்கள்.
அப்பொழுது நேபுகாத்நேச்சார் உக்கிரகோபங்கொண்டு சாத்ராக்கையும், மேஷாக்கையும், ஆபேத்நேகோவையும் அழைத்துக்கொண்டுவரும்படி கட்டளையிட்டான்; அவர்கள் அந்தப் புருஷரை ராஜாவின் சமுகத்தில் கொண்டுவந்துவிட்டபோது,
நேபுகாத்நேச்சார் அவர்களை நோக்கி: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களே, நீங்கள் என் தேவர்களுக்கு ஆராதனைசெய்யாமலும் நான் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்ளாமலும் இருந்தது மெய்தானா?
இப்போதும் எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தையும் நீங்கள் கேட்கும்போது, தாழ விழுந்து, நான் பண்ணிவைத்த சிலையைப் பணிந்துகொள்ள ஆயத்தமாயிருந்தால் நல்லது; பணிந்துகொள்ளாதிருந்தீர்களேயாகில், அந்நேரமே எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே போடப்படுவீர்கள்; உங்களை என் கைக்குத் தப்புவிக்கப்போகிற தேவன் யார் என்றான்.