ஆதி பராபரனின்‌ சுதனே

ஆதி பராபரனின்‌ சுதனே, கிறிஸ்தேசுநாதா,-எனக்‌
காகவே இத்தனை பாடுகள்‌ பட்டீரோ, யேசுநாதா?
தீதணுகாத பராபரன்‌ சேய்‌ அல்லோ, யேசுநாதா?-நீர்‌
செய்த குற்றம்‌ அணுவாகிலும்‌ தான்‌ உண்டோ, யேசுநாதா?
பாதகன்‌ நான்‌ அல்லோ கட்டுண்ண வேண்டிய தேசுநாதா?
-சற்றும்‌
பாவம்‌ இல்லாத நீர்‌ கட்டுண்ணப்‌ பட்டதேன்‌, யேசுநாதா?
வாதை எனக்கு வரத்தகும்‌ அல்லவோ, யேசுநாதா?-சற்றும்‌
மாசணுகாத நீர்‌ வாதைக்குள்‌ ஆனீரோ, யேசுநாதா?

2. மத்யஸ்தனாய்‌ எனக்காக வந்தீர்‌ அல்லோ, யேசுநாதா?-இந்த
வஞ்சகன்‌ சொந்தப்‌ பிணையாளி நீர்‌ அல்லோ, யேசுநாதா?
எத்தனை பாதகம்‌ செய்தவனாகிலும்‌, யேசுநாதா?-எனை
ரட்சிப்பதுன்‌ கடன்‌ அல்லாமல்‌, ஆர்‌ கடன்‌, யேசுநாதா?
சத்துரு நான்‌ என்‌ றறிந்தும்‌ இருந்தீரே, யேசுநாதா?-கெட்ட
சண்டாளன்‌ சிந்தையை முற்றும்‌ அறிவீரே, யேசுநாதா?
சித்தம்‌ இரங்கி, எனை முகம்‌ பார்க்கவே, யேசுநாதா?

என்னைத்‌
தேடி, வலிய வரத்‌ தயவானீரோ, யேசுநாதா?

3. பத்தம்‌ இல்லாததுரோகி நான்‌ அல்லவோ, யேசுநாதா?-உமைப்‌
பாடுபடுத்தின பாதகன்‌ நான்‌ அல்லோ, யேசுநாதா?
பெத்தரிக்கமான பெருமையினாலே நான்‌, யேசுநாதா?-கெட்ட
பேயைச்‌ சிநேகித்து, இக்கோலம்‌ ஆகினேன்‌, யேசுநாதா?
புத்தி யில்லா மிருகம்போல்‌ ஆயினேன்‌, யேசுநாதா?-மனம்‌
போன வழியெல்லாம்‌ போய்‌ அலைந்தேங்கினேன்‌, யேசுநாதா!
சித்தம்‌ வைத்தென்‌ பேரில்‌ திருக்கடைக்‌ கண்ணோக்கி, யேசு
நாதா!-உன்தன்‌
சீர்பதம்‌ சாஸ்வதம்‌ சேவை புரியச்செய்‌, யேசுநாதா?

- வேதநாயகம்‌ சாஸ்திரியார்‌

Start Downloading Your Apps