திட்டியே நகைத்து சேவகர்

1. திட்டியே நகைத்து சேவகர் காடி
தேடியோர் நொடியினில் கொணர்ந்து
எட்டிடாத் தூரத்தினில் அதை நீட்ட
இறைவனும் ருசித்திடா திருக்க

2. துட்டனா மிடது பாரிசக் கள்ளன்
துணிவு கொண்டையனை வைய
மற்றவனவனைக் கடிந்து பகர
வாயெடுத்தனன் அந்த நேரம்

3. குற்றமோ அணுவுமற்ற ஆண்டவன் மேல்
குறைசொல்ல அச்சமில்லையோ?
பட்டு நாம் தொலைக்கப் பல பாவம் புரிந்தோம்
பரிசுத்தன் யாதும் செய்திலரே

4. கிட்டி நான் ராச்சியந்தனில் வரும்போது
கிருபையாய் நினைத்தருளு மென்றான்
மட்டிலாப் பரதீஸ் வாழ்வையும் அளித்தார்
மாசில்லா யேசு நாயகனே

5. வலது பாரிசத்துக் கள்ளனுக் கன்பாய்
வாக்குறைத்த வல்ல பரனே
நிலைவரமான ஆவியை ஈந்து
நின்னுடன் இருப்பமெக் களிப்பாய்

6. நிலையில்லா உலகை சதமென்று திரிந்து
நின்னையும் பரத்தையும் மறந்து
அலைகடல் துரும்பின் கதியடையாது
ஆட்கொள்வாய் யேசு நாயகனே

Start Downloading Your Apps